மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: சீமான்
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாகையில், சீமான் கூறினார்.;
ஆர்ப்பாட்டம்
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுப்பதை கண்டித்தும்,161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மறுத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அழுத்தம் கொடுக்க வேண்டும்
குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றபோது, அந்த ராணுவத்தின் மீது வழக்கு தொடர்ந் தவர் மோடி. ஆனால் தமிழக மீனவர்கள் 480 பேர் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிறையில் வாடி கொண்டிருக்கிறார்கள்.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும், படகுகளையும் பறி கொடுத்திருக்கிறார்கள். மத்திய அரசு மீனவர்களின் உயிருக்கு மதிப்பளிக்காமலும், உணர்வை பற்றி கவலைப்படாமலும் உள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.