நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது: 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் - அண்ணாமலை
நாடு முழுவதும் மோடி அலை வீசுவதால், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பார் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
‘மனதின் குரல்’
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் 4-வது ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் அன்றாட நிர்வாக விஷயங்கள் மற்றும் நாட்டு நடப்புகள் குறித்து ரேடியோ, தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கடைசி நிகழ்ச்சி நடந்தது. அதை பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பார்ப்பதற்காக சென்னை அடையாறு காந்திநகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மாநாடு போல...
மாநாடு பந்தல் போன்ற அரங்கத்தில் 2 அகன்ற திரைகளும், 5 டி.வி.களும் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னை மண்டல உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் மேயருமான (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார்.
மாநிலத்தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, எம்.சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் காயத்ரிதேவி, கு.க.செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியை பார்த்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. ஏற்பாடுகளை கராத்தே தியாகராஜன் செய்திருந்தார்.
3-வது முறையாக மோடி பிரதமர்
பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் 15 ஆயிரம் இடங்களில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்பப்பட்டது. இது அரசியல் நிகழ்ச்சி அல்ல. நாட்டுநடப்புகளை தெரிந்துகொள்ள பொதுமக்கள் இதைப் பார்க்க வேண்டும்.
எந்த மொழி திணிப்பிலும் பா.ஜ.க.வுக்கு உடன்பாடு கிடையாது என்பதால் இந்தி மொழியை திணித்தாலும் அதை எதிர்ப்போம். இந்தி மொழி திணிப்பையே காங்கிரஸ்தான் கொண்டுவந்துவிட்டு, மாநிலத்தில் ஒரு பேச்சும், டெல்லியில் ஒரு பேச்சுமாக இருக்கிறது. ‘நீட்’ தேர்வு மூலம் மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், கிராமத்தினர் உள்ளிட்ட அனைத்து ஏழைகளும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளனர். அரசியலுக்காகவே சிலர் ‘நீட்’ தேர்வை எதிர்க்கின்றனர்.
நாடு முழுவதும் மோடி அலை வீசுவதால் வருகிற 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 எம்.பி.க்களுடன் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். தமிழகத்தில் இருந்து தேர்வாகும் எம்.பி.க்களும் மந்திரிசபையில் இடம்பெறுவார்கள். புதிய கல்விக்கொள்கையில் நல்ல விஷயங்கள் அதிகம் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.