நூற்றாண்டு நிறைவு விழா: இரா.நெடுஞ்செழியன் சிலையை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இரா. நெடுஞ்செழியன் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.

Update: 2021-12-26 01:53 GMT
சென்னை, 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள இரா.நெடுஞ்செழியன் சிலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைத்து, நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள அவருடைய நூல்களுக்கான நூலுரிமைத் தொகையையும் வழங்குகிறார்.

‘தலைசிறந்த பகுத்தறிவுவாதிகளில் ஒருவர் என்றும், எனக்கே பாடம் கற்றுத்தரும் அளவிற்கு தகுதி வாய்ந்தவர் நாவலர்’ என்று பெரியாராலும், ‘‘தம்பி வா தலைமை ஏற்க வா, நாட்டுக்கு கிடைத்திருக்கும் நல்லவரே, நாவலரே’ என அண்ணாவும், ‘நாடு போற்றும் நாவலரே, நற்றமிழ்க்காவலரே, நடைமிடுக்கும், நகைச்சுவை எடுப்பும் நற்றமிழ்ப்பேச்சால் நாட்டோரை கவர்ந்திழுக்கும் நாவண்மைமிக்க நாவலரே’ என கருணாநிதியும், ‘கற்பதில் நாட்டமும், கற்றதை தெளிவதில் ஆர்வமும், உண்மையை சொல்வதில் ஊக்கமும், அறிந்ததை எடுத்துரைப்பதில் மகிழ்ச்சி கொண்ட பண்பாளர்’ என பேராசிரியர் அன்பழகனால் போற்றி புகழப்பட்டவர் இரா.நெடுஞ்செழியன் ஆவார்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் கடந்த 1920-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி ராஜகோபாலனார்- மீனாட்சி தம்பதிக்கு மகனாக பிறந்தார். தமிழ்மொழி மீது கொண்டிருந்த அளவற்ற பற்றின் காரணமாக, இரா.நாராயணசாமி என்ற தனது பெயரை இரா.நெடுஞ்செழியன் என்று மாற்றி கொண்டார். படிக்கும்போது, தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆர்வமுடன் கற்று தேர்ந்தார். கடந்த 1944-ம் ஆண்டு பெரியாருடன் திராவிட இயக்கத்தில், இளமை காலத்திலேயே, தன்னுடைய 24-ம் வயதில் இணைத்து கொண்டார்.

ஆட்சி மாற்றங்களிலும், அரசியல் மாற்றங்களிலும், மொழிப்போரிலும் மாணவர்களின் பங்களிப்பு மகத்தானது என்பதை உணர்ந்திருந்த காரணத்தால், திராவிட இயக்கங்கள் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தபோது இரா.நெடுஞ்செழியன் பங்களிப்பும், பேராசிரியர் க.அன்பழகனின் பங்களிப்பும் அளவிடக்கரியது.

இடைவிடாத அரசியல் மற்றும் ஆட்சிப்பணிகளுக்கு இடையிலும், அழகு தமிழில் எழுதும் பழக்கமதை என்றும் கைவிடாத காரணத்தால், இரா.நெடுஞ்செழியன், எண்ணற்ற கதைகள், கட்டுரைகளோடு 30-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். 1967 முதல் 1969-ம் ஆண்டு வரை அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராகவும், 1971 முதல் 1975-ம் ஆண்டு வரையில் கருணாநிதி ஆட்சியில் கல்வி அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். பின்னர், அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டு உணவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘திராவிட இயக்கத்தின் சொல்லோவியம் நடமாடும் பல்கலைக்கழகம் நாவலரின் நூற்றாண்டு நிறைவு விழாவை அறிவு சார்ந்த தமிழ் உலகமும், திராவிட இயக்கத்தின் தொண்டர்களும் கொண்டாடி மகிழ்வோம்’ என அறிவித்திருந்தார்.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது இரா.நெடுஞ்செழியனுக்கு சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அவருடைய சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைக்கப்பட்ட சிலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்