வீட்டை விற்பதாக கூறி முன்பணம் பெற்று நடிகர் நாகசேகரிடம் ரூ.50 லட்சம் மோசடி

பெங்களூருவில் வீட்டை விற்பதாக கூறி முன்பணம் பெற்று நடிகர் நாகசேகரிடம் ரூ.50 லட்சத்தை மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2021-12-25 15:25 GMT
பெங்களூரு: பெங்களூருவில் வீட்டை விற்பதாக கூறி முன்பணம் பெற்று நடிகர் நாகசேகரிடம் ரூ.50 லட்சத்தை மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 

நடிகர் நாகசேகர்

கன்னட திரை உலகில் பிரபல நடிகராகவும்,  இயக்குனராகவும் இருந்து வருபவர் நாகசேகர். இவர் கன்னடத்தில் மைனா  உள்பட ஏராளமான படங்களை இயக்கி உள்ளார். மேலும் பல படங்களில் நடித்தும் இருக்கிறார். 
இந்த நிலையில் இவர் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் ஜெயண்ணா லே-அவுட்டில் ஒரு வீடு விற்பனைக்கு இருப்பதாக அறிந்தார். இதையடுத்து அந்த வீட்டை வாங்க நாகசேகர் திட்டமிட்டார். 

இதற்காக அந்த வீட்டின் உரிமையாளரான மீனா என்பவரை அணுகினார். அப்போது மீனா, ரூ.2.70 கோடிக்கு வீட்டை விற்க இருப்பதாக கூறினார். அதற்கு நாகசேகரும் ஒப்புக்கொண்டார். பின்னர் மீனாவிடம் வீட்டை வாங்குவதற்காக முன்பணமாக ரூ.50 லட்சத்தை நாகசேகர் கொடுத்தார். 

ரூ.50 லட்சம் மோசடி

கடந்த ஆண்டு(2020) ஆகஸ்டு மாதம் மீனாவை நேரில் சந்தித்த நடிகர் நாகசேகர், வீட்டை வாங்குவதற்கான பத்திரங்களை தயார் செய்து கொடுத்தார். மேலும் மீனாவிடம் நாகசேகர் கையெழுத்து பெற முயன்றார். அப்போதுதான் மீனா ஏற்கனவே அந்த வீட்டை வேறொருவருக்கு விற்றுவிட்டது நாகசேகருக்கு தெரியவந்தது. 

இதுபற்றி நாகசேகர், மீனாவிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லவில்லை. மேலும் அவரிடம் வாங்கிய முன்பணம் ரூ.50 லட்சத்தையும் திருப்பி கொடுக்க மீனா மறுத்துவிட்டார். மேலும் மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உடந்தையாக ராஜ்குமார் என்பவரும் செயல்பட்டதாக தெரிகிறது.

வலைவீச்சு

இதுபற்றி நாகசேகர் ஆர்.ஆர்.நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாவையும், ராஜ்குமாரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். 
பிரபல நடிகரிடம் வீட்டை விற்பதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்