வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நில அதிர்வு: மக்கள் அச்சம்
வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பேரணாம்பட்டு,
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி ஏற்பட்ட நில அதிர்வு 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை 9.30 மணி அளவில் மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நில அதிர்வுக்கான காரணம் குறித்து புவியியல் நிபுணர்களை வைத்து கண்டறியுமாறும், பெரிய பாதிப்புகள் ஏற்படும் முன்னர் காரணத்தை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.