பொங்கல் பண்டிகைக்கு 10 இலவச பொருட்கள் புதுவை அரசு ஏற்பாடு

பொங்கல் பண்டிகைக்கு 10 வகையான இலவச பொருட்களை வழங்க புதுவை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

Update: 2021-12-24 16:11 GMT
புதுச்சேரி
புதுவையில் பொங்கல் பண்டிகைக்கு 10 வகையான இலவச பொருட்களை வழங்க புதுவை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

பொங்கல் பரிசு

புதுவையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை யொட்டி அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக 6 வகையான பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இ்ந்தநிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இலவச பொருட்கள் வழங்க அப்போது கவர்னராக இருந்த கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பொங்கல் பொருட்களுக்குரிய தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசில் மீண்டும் பொங்கலுக்கு இலவச பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

10 பொருட்கள்

தமிழகத்தில் ஏற்கனவே 20 வகையான இலவச பொருட்கள் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மக்களுக்கும் இலவசமாக பொங்கல் பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்தநிலையில் புதுவையில் பொங்கல் இலவச பொருட்களாக 100 கிராம் மஞ்சள் பவுடர், 2 கிலோ பச்சரிசி, துவரம் பருப்பு 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி பருப்பு 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், உளுந்து,  கடலை பருப்பு, பாசிபருப்பு தலா 500 கிராம் என 10 வகையான பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

டெண்டர்

இந்த பொருட்களை கொள்முதல் செய்ய பாப்ஸ்கோ நிறுவனம் டெண்டர் விட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்த முறை அனைத்து பொருட்களும் பேக்கிங் செய்யப்பட்டு ஒரே பையில் வழங்கும் வகையில் அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்