காட்பாடி அருகே மேம்பாலத்தில் விரிசல் - 23 ரெயில்கள் ரத்து
வேலூர் காட்பாடி அருகே பொன்னையாற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் இன்று 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் பொன்னையாற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் இன்று 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே புறப்பட்டச்சென்ற ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
பொன்னையாற்றில் ஆங்கிலேயர்கால ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் நாளையும் 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு - சென்னை சதாப்தி, சென்னை - கோவை சதாப்தி ரெயில் சேவையும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலாபேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.