சட்டசபையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-12-23 17:40 GMT
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
முற்றுகை போராட்டம்
முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி பொதுப்பணித்துறையில் போர்மேன், ஓவர்சீயர், சீனியர் மெக்கானிக், ஒர்க் இன்ஸ்பெக்டர், மீட்டர் ரீடர், எம்.டி.எஸ். போன்ற பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். வவுச்சர் ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.10 ஆயிரமாகவும், 26 நாட்கள் வேலை என்று அறிவித்ததை பொதுப்பணித்துறை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.
இதற்காக அவர்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு ஒன்று கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். 
52 பேர் கைது
இந்த ஊர்வலத்துக்கு சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தார். ஊர்வலம் புஸ்சி வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தபோது, அங்கு தடுப்புகளை வைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் தடுப்புகளை மீறி ஊழியர்கள் செல்ல முயன்றனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை போலீசார் கைது செய்து, கரிக்குடோனில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை சிறிது நேரத்தில் விடுவிடுத்தனர்.
இதற்கிடையே அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் குடிநீர் வினியோகத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொழில்நுட்ப ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்