ராணிப்பேட்டை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ரூ.76 லட்சம் முறைகேடு
ராணிப்பேட்டை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தலைவர் மற்றும் 10 நிர்வாகிகள் சேர்ந்து ரூ.76 லட்சம் வரை முறைகேடு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கடந்த 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரு நிதியாண்டுகளில் அதிக அளவிலான மோசடிகள் நடந்து வந்ததாக புகார்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் வேலூர் பால்வளத்துறை துணை ஆணையர் தலைமையில் இதனை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் மூலம் 76 லட்சம் ரூபாய் வரை மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட சங்க தலைவர் மற்றும் 10 நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, அவர்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அவகாசத்திற்குள் முறைகேடு செய்த பணத்தை அவர்கள் சங்கத்தில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் பால்வளத்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.