புதுவையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம்
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புதுச்சேரி
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டம்
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஆண்டு புதியதாக ஒமைக்ரான் தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளன.
ஆனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஓட்டல்களில் இசை நிகழ்ச்சிகள், புத்தாண்டு விருந்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இசை நிகழ்ச்சிகள்
அதுமட்டுமின்றி பழைய துறைமுக வளாகம், சீகல்ஸ், பாரடைஸ் பீச் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் புதுவைக்கு லட்சக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுவையில் உள்ள ஓட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. புத்தாண்டை கொண்டாட வருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி உள்ளார். புதுவை பழைய துறைமுகத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பழைய துறைமுக பகுதியை சீர்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு கூடும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, அவர்களது வாகனங்களை எங்கெங்கு நிறுத்துவது? எந்த வழியாக அனுமதிப்பது? என்பது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், ராகுல்அல்வால் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் சுற்றுலா துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.