சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக பட்டம் பெற முயற்சி...?
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் படிக்காமலேயே பட்டம் பெற முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போர் தேர்வில் பங்கேற்க பல்கலைக்கழகம் வழங்கிய சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி இந்த முறைகேடு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் 1980-81 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் தேர்வெழுத கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்றும், தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் தலா ரூ.3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு இந்த மோசடிக்கு உதவியது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு யாரேனும் இதுபோன்ற மோசடி செயலில் ஈடுப்பட்டுள்ளர்களா? என்று கண்டுபிடிக்க விசாரணை குழுவை அமைத்தும் சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.