நடுக்கடலில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்: 2 தமிழக படகுகளுடன் 14 மீனவர்கள் சிறைபிடிப்பு

நடுக்கடலில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. நேற்று தமிழகத்தை சேர்ந்த மேலும் 2 படகுகளுடன் 14 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-12-20 19:57 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 8 விசைப்படகுகளுடன் 55 மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்த விவகாரம் தமிழகத்தில் மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் 43 மீனவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையிலும், 12 மீனவர்கள் மன்னார் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 14 மீனவர்கள்

இலங்கையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு தமிழகத்தில் கண்டனம் எழுந்திருக்கும் நிலையில், நேற்று மேலும் 2 படகுகள் மற்றும் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்ததாக தகவல் வெளியானது.

கைது செய்யப்பட்டுள்ள அந்த 14 மீனவர்களை யாழ்ப்பாணம் அருகே உள்ள ரணதீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களா அல்லது நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களா என்பது குறித்த விவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரியவரும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இலங்கை கடற்படை இ்ன்னும் 2 மீன்பிடி படகுகளை சிறைபிடித்ததாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இதுவும் மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீனவர்கள் போராட்டம்

இதற்கிடையே நேற்று ஏற்கனவே கைதான 55 மீனவர்களையும், அவர்களைது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாரம்பரிய கடல்பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவர்களும் மற்றும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

வேலை நிறுத்தம்

மேலும் ராமேசுவரத்தில் நேற்று மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் தொடங்கினர்.

மேலும் செய்திகள்