அதிமுக முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் துடிப்பதை தாம் கண்டிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2021-12-20 10:48 GMT
சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; - "திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி, பொய் வழக்குகள் போடுவது தொடர் கதையாகி உள்ளது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபொழுது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்றதாக புகார்கள் வந்துள்ளதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில், அந்தப் புகாருக்கு எந்தவிதமான நேரடி முகாந்திரமும் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சரை இவ்வழக்கில் இணைத்து அவரை கைது செய்யத் துடிக்கிறது தமிழக அரசு. உச்ச நீதிமன்றத்தில் அவர் பிணை கோரும் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், ஆளும் திமுக அரசு தன்வசமுள்ள காவல் துறையின் மூலம், ராஜேந்திர பாலாஜி, அவரின் குடும்ப உறுப்பினர்களான வசந்தகுமார், ரமணா மற்றும் வாகன ஓட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூவரையும், எந்தவித புகாரும் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சரின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, காவல் துறையினரின் இந்தச் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த வழக்கிற்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் யாரையும் சட்டத்திற்கு முரணாக தொந்தரவு செய்யக்கூடாது என்றும், உடனடியாக மூவரையும் விடுவிக்க வேண்டும் என்றும்,மேலும் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனக்குள்ள சட்ட உரிமையின்படி புனையப்பட்ட இந்த வழக்கில், தனக்கு பிணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், இந்த தமிழக அரசின் காவல்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் துடிப்பதையும்; உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கடும் கண்டனத்திற்கு பிறகும், அவரது உறவினர்களை தொந்தரவு செய்வதையும், கடுமையாக கண்டிக்கின்றேன்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்