மருத்துவப்படிப்பு கல்வி கட்டணம் எவ்வளவு?

மருத்துவப்படிப்பு கல்வி கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2021-12-19 22:28 GMT
சென்னை,

மருத்துவப் படிப்பு இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணம் எவ்வளவு என்பது தொடர்பான விவரங்கள் ஒவ்வொரு ஆண்டு வழிகாட்டுதல்கள் வெளியிடும் போது அதில் தெரிவிக்கப்பட்டுவிடும்.

அந்தவகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர ஒரு ஆண்டுக்கு கல்வி கட்டணம் ரூ.13 ஆயிரத்து 610, பி.டி.எஸ். இடங்களுக்கு ரூ.11 ஆயிரத்து 610 ஆகும். இதில் கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் கல்வி கட்டணம் ரூ.1 லட்சம்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கல்வி கட்டணம் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரையிலும், பி.டி.எஸ். இடங்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஒரு விண்ணப்பதாரர் கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்து, குறிப்பிட்ட காலத்துக்குள் சேரவில்லை என்றால் அபராத கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், படிப்பில் சேர்ந்து இடையில் நின்றால், இடைநின்ற கட்டணமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டவேண்டும். அது எந்த காலக்கட்டத்துக்குள் இடைநின்றால் என்ற விவரமும், அதற்கு தகுந்த அபராத கட்டணமும் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் செய்திகள்