நவல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நவல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-12-19 18:27 GMT
புதுக்கோட்டை, 
திருச்சி நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (வயது 51). இவர் கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஆடு திருடர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று பிடித்த போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே தோகூரை சேர்ந்த மணிகண்டன் (19) மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14, 9 வயதுடைய 2 சிறுவர்களையும் கீரனூர் போலீசார் கைது செய்தனர்.கைதானவர்களில் மணிகண்டன் திருமயம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பின் புதுக்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். மற்ற 2 சிறுவர்களும் கூர்நோக்கு இல்லத்தில் உள்ளனர். கைதான மணிகண்டன் சமீபத்தில் ஜாமீன் கோரிய மனு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் கைதான மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர்  கவிதாராமு குண்டர் சட்டத்தில் மணிகண்டனை கைது செய்ய உத்தரவிட்டார். 
இதைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் மணிகண்டனிடம் புதுக்கோட்டை சிறையில் வைத்து போலீசார் நேற்று கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றினர். இதற்கிடையில் கைதான மணிகண்டனுக்கு நீதிமன்ற காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெற உள்ளது. இதற்காக அவர் இன்று கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்