பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: வினாத்தாளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளம்பெண் அதிரடி கைது
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளம்பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல்,
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த தேர்வு மீண்டும் கடந்த 8-ந் தொடங்கி நடத்தப்பட்டது. கணினி வழியாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் வினாத்தாள் கையில் வழங்கப்படாது. இந்த நிலையில் ஆங்கில பாடப்பிரிவு தேர்வுக்கான வினாத்தாள் ஒரு வெள்ளைதாளில் எழுதப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த பூர்ணிமா தேவி (வயது 27) என்ற இளம்பெண் தேர்வு முடிந்த பிறகு வினாக்களை வெள்ளை தாளில் எழுதி தேர்வு விதிமுறைகளை மீறி அதை வெளியே கொண்டு வந்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளம்பெண் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அந்த பெண் செயல்பட்டதாக கூறி அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்து இருந்தனர். அதன்படி பூர்ணிமா தேவி மீது நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.