"வீட்டின் கீழே அமரக்கூடாது" - நரிக்குறவ பெண் மீது தண்ணீர் ஊற்றி விரட்டியடித்த காட்சி

பழனியில் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்த நரிக்குறவர் இன பெண்கள் மீது‌ ஒருவர் தண்ணீர் ஊற்றி விரட்டும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2021-12-19 09:50 GMT

திண்டுக்கல்,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறவர் இன மக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த போதும் அரசு சார்பில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் மற்றும் குறவர் இன மக்கள் அங்குள்ள கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கோவில் நடைபெறும் அன்னதானத்திற்கு சாப்பிட கூட அனுமதிக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பூஞ்சேரி கிராமத்திற்கு வந்து கோயிலை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து கோவில் வளாகத்தில் குறவர் இன மக்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். தொடந்து அந்த மக்களுக்கு வீட்டுமனை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இளம்பெண் விஜயசாந்தி  பழனியில் தங்கி பாசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை பழனி மலைக்கோவில் எதிரேயுள்ள சுபம் ஹோட்டல் சாலையில் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தார். 

அப்போது அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகேயுள்ள வீட்டின் மாடியில் இருந்து‌ பெண் ஒருவர் தண்ணீரை ஊற்றி விரட்டியுள்ளார். மேலும் அங்கு அமர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதை வீடியோ எடுத்த ஒருவர் சமூகவலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து‌ இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

பழனி பழனியில் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குறவர் இன பெண் ஒருவர் தண்ணீரை ஊற்றி விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்