இன்னுயிர் காப்போம் மருத்துவ திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை அளிக்கும் ‘இன்னுயிர் காப்போம்’ மருத்துவ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Update: 2021-12-19 00:12 GMT
தமிழ்நாட்டில் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைகிறவர்களை காப்பாற்றுகிற வகையில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் தொடங்கினார்

சாலை விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், அவர்களுக்கு முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிப்பதற்கு இந்த திட்டம் வழிவகை செய்கிறது.

இந்த திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்த விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உயிரிழப்புகளை குறைப்பதே நோக்கம்

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என்ற குறளுக்கு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதுதான் என்னுடைய நினைவுக்கு வருகிறது. “அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படி கைகள் உடனடியாக செயல்பட தொடங்குகிறதோ, அதை சரிசெய்யவேண்டும் என்று எண்ணுகிறதோ, அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தை போக்க துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்” என்று அவர் உரை எழுதியிருக்கிறார். அப்படி உடனடியாக உதவக்கூடிய வகையில், தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த “இன்னுயிர் காப்போம் திட்டம்”. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். அத்தகைய தோழமை எண்ணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம்தான் “இன்னுயிர் காப்போம் திட்டம்”.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி நமது நாட்டுக்கே முன்னணி மாநிலமாக, பெருமை சேர்க்கக்கூடிய வகையில் நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், சாலை விபத்துகளை பொறுத்தவரையில், நமது நாட்டில் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருகிறது. அது உள்ளபடியே நமக்கு மிகுந்த வருத்தத்தை தந்துகொண்டிருக்கிறது. சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கத்தோடு தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள திட்டம்தான் இந்த இன்னுயிர் காப்போம் திட்டம்.

அரசே ஏற்கும்

விபத்தில் உயிர் போவதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது நேரமும், காலமும்தான். விபத்து நடந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டால் நிச்சயமாக அந்த உயிரை காப்பாற்றமுடியும். காலதாமதம் ஆகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை மருத்துவர்கள் ‘கோல்டன் ஹவர்ஸ்' என்று சொல்வது உண்டு. விலைமதிக்க முடியாத அந்த தருணத்தில் எடுக்கும் முடிவுகள், துரிதமான செயல்பாடுகள்தான் மனித உயிர்களை காப்பாற்றுகிறது. விபத்தை எதிர்கொள்பவர் அடையக்கூடிய மாபெரும் துன்பம் என்பதும் இந்த நேரம்தான். அப்படி சேர்க்கப்படும் இடம், அரசு மருத்துவமனையா? தனியார் மருத்துவமனையா? என்ற பாகுபாடு இல்லாமல் இருந்திடவேண்டும். அதை முழுமையாக தவிர்க்கவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

அதனால்தான் இந்த திட்டத்தின் மிக முக்கியமான ஒரு அம்சமாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளோம். சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அறுவை சிகிச்சைகளும், தீவிர சிகிச்சைகளும் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டணமின்றி சிகிச்சை

* சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.

* இந்த திட்டத்துக்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேறு நாட்டவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும், அதாவது தமிழகத்தின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர் அனைவருக்கும் முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81 சிகிச்சை தொகுப்பு) சிகிச்சை அளிக்கப்படும்.

* 48 மணி நேரத்துக்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிலையற்றவராக இருந்தால் அல்லது மேலும் தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அல்லது தகுந்த வழிகாட்டுதல்களின்படி தொடர் சிகிச்சைகள் நிச்சயமாக வழங்கப்படும்.

பெற்றோர்களே கவனம்

விபத்துகள் நடந்தால் அரசு எப்படி உதவும் என்பதைத்தான் இதுவரை நான் சொன்னேன். ஆனால் அரசாங்கத்தில் மிகமுக்கியமான நோக்கம் விபத்தே இருக்கக்கூடாது என்பதுதான். விபத்துக்கு மிக முக்கியமான காரணம், அதிகப்படியான வேகம்தான். சாலைகளில் வாகனத்தை ஓட்டும்போது வேகத்தை குறையுங்கள். வேகத்தை உங்களது உழைப்பில் செயல்படுத்துங்கள். சாலைகளில், தெருவில் காட்டவேண்டாம். அதில் உங்கள் வேகத்தை காட்ட வேண்டியதில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ‘ஹெல்மெட்' அணியவேண்டும். சிலர் ‘ஹெல்மெட்' வாங்கி ‘பைக்' முன்னால் வைத்திருப்பார்கள். போலீசை பார்த்ததும் போட்டுக்கொள்வார்கள்.

இன்று கார்களின் விலைக்கு சமமாக ‘பைக்' விலை வந்துவிட்டது. சில ‘பைக்'குகள் கார்களை விட அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த பைக்'குகளை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. அதற்கான முழுமையான பயிற்சியும், திறமையும் இருப்பவர்கள்தான் இயக்கமுடியும். பையன் கேட்கிறான் என்பதற்காக இப்படி விலை உயர்ந்த ‘பைக்'குகளை வாங்கிக்கொடுத்து பிள்ளைகளை இழந்த பெற்றோர்களையும் பார்க்கிறோம். ஆகவே, பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கித்தருவதில் கவனமாக இருக்க வேண்டும்.

விபத்து இல்லாத தமிழகம்

கார்களில் பயணம் செய்யும்போது, எப்போதும் ‘சீட் பெல்ட்' அணிய வேண்டும். மிக அதிகமான வேகத்தில் செல்வதைத் தவிர்க்கவேண்டும். இவை அனைத்தையும் விட சாலை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். சிவப்பு விளக்கு விழுந்தால் நிற்பதைக் கூட, தங்களுக்கு இழைக்கப்படும் அவமானமாக சிலர் நினைக்கிறார்கள். சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது என்பதை போலீசுக்கு பணிந்து போவதாக சிலர் நினைக்கிறார்கள். இல்லை, சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலமாக ஒரு தனிமனிதரின் சமூக பண்பாடு வெளிப்படுகிறது. தனிமனித ஒழுக்கம் வெளிப்படுகிறது. அத்தகைய சமூக பண்பாடு கொண்டவர்களாக மக்கள் அனைவரும் செயல்படுவதன் மூலமாக விபத்து இல்லாத தமிழகத்தை நிச்சயமாக, உறுதியாக அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பங்கேற்றோர்

இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், ஜி.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, எம்.வரலட்சுமி, எஸ்.அரவிந்த் ரமேஷ், எழிலரசன், எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அதிகாரி பி.செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், தேசிய நல்வாழ்வுக்குழும இயக்குனர் டாக்டர். தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, ஆதிபராசக்தி அறக்கட்டளை துணைத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்