விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களை கொண்டு செல்வது எப்படி? விமானப்படையினர் ஆலோசனை
குன்னூர் அருகே விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களை கொண்டு செல்வது எப்படி? என்பது குறித்து விமானப்படையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஹெலிகாப்டர் பாகங்கள் சேகரிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந் தேதி மரங்கள் மீது ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
அப்போது ஹெலிகாப்டரில் இருந்த எரிபொருட்கள் போன்றவை வெடித்து சிதறியது. இதனால் சுமார் 30 அடி உயரம் வரை தீப்பற்றி எரிந்தது. இதில் ஹெலிகாப்டரின் பாகங்கள் நாசமானது. இருப்பினும் இறக்கை, வால், முன்பகுதி, என்ஜின், ரோட்டார் போன்ற பாகங்கள் எரிந்த நிலையிலும், நல்ல நிலையிலும் சேகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாகங்கள் அதிக பாரமாக இருப்பதால் விமானப்படையினர் கைகளால் தூக்கி வெளியே எடுத்து செல்ல முடியாது. இதனால் பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஒரே இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு இரவும், பகலும் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய ஆலோசனை
இந்த நிலையில் நேற்று விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர், விமானப்படையினர் ஆய்வு செய்தனர். அப்போது சேகரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் பாகங்களை பாதுகாப்பாக எடுத்துச்செல்வது குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் குன்னூர் ஊராட்சி ஒன்றியம், வனத்துறை மற்றும் கிரேன் ஆபரேட்டர்களிடம் அறிவுரைகள் கேட்கப்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வனப்பகுதி வழியாக சாலை அமைத்து வாகனத்தை கொண்டு வந்து எடுத்துச்செல்லலாமா? அல்லது மேல் பகுதியில் தேயிலை தோட்டம் வழியாக பாகங்களை மீட்டு எடுத்து செல்ல முடியுமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வனப்பகுதியில் இருந்து சாலை அமைத்து குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்ல மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்கு மேலும் பல நாட்கள் ஆகும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
இதனால் அந்த இடத்தில் இருந்து பாகங்களை எடுத்து செல்வதில் சிரமம் உள்ளது. இருப்பினும் ஹெலிகாப்டர் பாகங்களை கிரேன் மூலம் மீட்டு கோவை சூலூர் விமானப்படைத்தளத்துக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நேற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் முதல் தலைமுறை பட்டதாரி, ஐ.டி.ஐ., பிளஸ்-2, என்ஜினீயரிங் படித்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்று கணக்கெடுக்கப்பட்டது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.