பதவியில் இருக்கும்போது செருக்குடன் செயல்படக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

பதவி என்பது ஆடை மாதிரிதான். அதனால் பதவியில் இருக்கும்போது, செருக்குடன் செயல்படக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசினார்.

Update: 2021-12-18 18:09 GMT
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அண்மையில் பதவி ஏற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேசுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த இந்த விழாவில், ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, வி.பாரதிதாசன், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ்குமார், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், ஜெ.சத்தியநாராயண பிரசாத், ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், வக்கீல்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு கிளை

இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று பேசிய பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சுப்ரீம் கோர்ட்டு கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தி.மு.க. எம்.பி.யும், மூத்த வக்கீலுமான பி.வில்சன், எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும், அதை எளிதில் தீர்வு காணும் திறமை கொண்டவர் நீதிபதி சுந்தரேஷ் என்று பாராட்டு தெரிவித்தார். மேலும், நீதிமன்றம், நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும் வக்கீல்கள் மீது பார் கவுன்சில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், நீதிபதிகளை அவதூறு செய்யும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் ஒரு போதும் தயங்காது என்றார்.

செருக்கு கூடாது

நீதிபதி எம்.எம்.சுந்தரேசை பாராட்டி ஐகோர்ட்டு நீதிபதிகள் பேசினர். இதையடுத்து ஏற்புரையாற்றிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், “டெல்லியில் தற்போது நிலவும் குளிரை விட, இங்கு காட்டப்பட்ட பாச மழையால் உடல் நடுங்குகிறது. பதவி என்பது ஆடை மாதிரிதான். அதனால் பதவியில் இருக்கும்போது, யாரும் செருக்குடன் செயல்படக்கூடாது. சில நேரங்களில் வக்கீல்கள் தவறிழைத்தாலும், அவர்கள் மீது நீதிபதிகள் கோபப்படக்கூடாது. நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், தற்போது தாக்கலாகும் வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால் தான், நீதிமன்றங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். எனவே, மக்களை தேடிச்சென்று நீதி வழங்க வேண்டும்” என்று பேசினார்.

நிலுவையில் உள்ளது

சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அதுதொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்று குறிப்பிட்டார். இறுதியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பார் கவுன்சில் துணை தலைவர் வி.கார்த்திகேயன் நன்றி தெரிவித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்