ஊழியர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா புதுவை வர்த்தக நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

ஊழியர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்பது குறித்து வர்த்தக நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினார்கள்.

Update: 2021-12-18 15:17 GMT
புதுச்சேரி
ஊழியர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்பது குறித்து வர்த்தக நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினார்கள்.

அதிரடி ஆய்வு

புதுவையில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கினை எட்ட அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் மெடிக்கல் ஸ்டோர் வைத்திருக்கும் சிலர் கூட கொரோனா தடுப்பூசி போடாமல் கடைகளை திறப்பதாக சுகாதாரத்துறையின் கவனத்துக்கு தகவல்கள் சென்றன. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் தலைமையில் இயக்குனர் ஸ்ரீராமுலு, புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், வருவாய் அதிகாரி சாம்பசிவம் மற்றும் மருத்துவ குழுவினர்  இன்று புஸ்சி வீதி, காந்தி வீதியில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பொய் கூறிய ஊழியர்கள்

அப்போது கடைகளில் பணியாற்றுபவர்கள் சிலர் தடுப்பூசி போடாமல் இருப்பது தெரியவந்தது. அவர்களை கடையை விட்டு வெளியேற்றுமாறு அதிகாரிகள் குழுவினர் அறிவுறுத்தினர். சிலர் தடுப்பூசி போட்டதாக பொய் கூறினார்கள்.
அவர்களது செல்போன் நம்பரை பெற்ற ஆய்வு நடத்தியபோது அவர்கள் தடுப்பூசி போடாமல் பொய் கூறியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதையேற்று அவர்களுக்கு ஆய்வுக்கு சென்ற மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.

எச்சரிக்கை

சில கடைக்காரர்கள் தடுப்பூசி போடாமல் கடை திறந்திருப்பதை கண்ட அதிகாரிகள் குழுவினர் கடுமையாக எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து கடைகளை மூடிய அவர்கள் தடுப்பூசி போட்டுவிட்டு வந்து கடையை திறப்பதாக கூறிவிட்டு சென்றனர்.
சில கடைகளில் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த அதிரடி ஆய்வு தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் உதயகுமார் கூறியதாவது:-

அபராதம்

பொதுமக்கள் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். சிலர் முகக்கவசம் அணியாமல் உள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கிறோம்.
கடைகளில் பணிபுரிபவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்று சோதனை செய்கிறோம். ஊசி போடாதவர்களை கடைகளை விட்டு வெளியே அனுப்ப கூறியுள்ளோம்.

அரசு ஊழியர்கள்

சிலர் ஊசி போட்டுவிட்டதாக பொய் கூறுகிறார்கள். அவர்களது ரெக்கார்டுகளை ஆய்வு செய்கிறோம். அவர்கள் கூறியது பொய் என்று தெரிந்ததும் அவர்களாகவே ஊசி போட்டுக்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
அரசு ஊழியர்களில் ஊசி போடாதவர்களை ஊசி போட சொல்கிறோம். அவ்வாறு போடாதவர்களை அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்று சொல்ல உள்ளோம்.
இவ்வாறு செயலாளர் உதயகுமார் கூறினார்.

மேலும் செய்திகள்