குமரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல 31-ந் தேதி முதல் 3 நாட்கள் தடை

குமரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல 31-ந் தேதி முதல் 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அரவிந்த் அறித்துள்ளார்.

Update: 2021-12-17 22:27 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல 31-ந் தேதி முதல் 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அரவிந்த் அறித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், நீர் வீழ்ச்சி, பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை), 1-ந் தேதி (சனிக்கிழமை) 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுகிறது.

அன்றைய தினங்களில் கன்னியாகுமரி பூம்புகார் படகு சேவை, திற்பரப்பு நீர் வீழ்ச்சி மற்றும் கடையால் பகுதி படகு சேவை போன்றவை இயங்க அனுமதி இல்லை. பொதுமக்கள் நோய்த்தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கதவு ஜன்னல் அனைத்தையும் திறந்து அனைத்து அறைகளும் காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் அதிகமாக கடைகள், வணிக நிறுவனத்தினுள் நுழைவதை உரிமையாளர் கண்காணிக்க வேண்டும். வாடிக்கையாளர் குறிப்பிட்ட இடைவெளியில் நிற்க ஏதுவாக உரிய நடவடிக்கைகளை கடை நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நிபந்தனைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பிட்ட இடைவெளியில் கடைகள், வணிக நிறுவனங்கள் வெளியே பொதுமக்கள் வரிசையாக நிற்க அடையாளம் வரைந்து கண்காணிக்க வேண்டும். கொரோனா வைரசின் புதிய மாறுபாடு ஒமைக்ரான் குமரி மாவட்டத்தினுள் பரவாமல் தடுக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக சேரும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பண்டிகை காலங்களில் தவறாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்