பள்ளியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பலியான 3 மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நெல்லையில் பள்ளியின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-12-17 22:16 GMT
சென்னை,

திருநெல்வேலி நகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பள்ளியில் நேற்று காலை 10.50 மணியளவில் பள்ளியில் உள்ள கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி.விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர்.சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இரங்கல்

மேலும் எம்.இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக் அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட 4 மாணவர்கள் படுகாயமுற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தை அறிந்த, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

மேலும் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமுற்ற 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்