சாத்தான்குளம் இரட்டை கொலையில் போலீசாரே ஆவணங்களை திருத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் போலீசாரே ஆவணங்களை திருத்தியதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.

Update: 2021-12-17 20:51 GMT
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தந்தை-மகன் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த சமயத்தில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். விசாரணை முடிவில் இந்த வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு நீதிபதி பத்மநாபன் ஒத்திவைத்தார்.

பின்னர் இதுகுறித்து ஜெயராஜ் மனைவி செல்வராணியின் வக்கீல் கூறுகையில், ஜெயராஜ்-பென்னிக்சை சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்தனர். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடல் முழுவதும் ரத்தக்கசிவு ஆங்காங்கே இருந்தது.

பொய் புகாரின்பேரில் வழக்கு

இதனால் போலீசார் தங்களின் மீது எந்த புகாரும் வந்துவிடக்கூடாது என்றும், இவர்களை தாக்கியதால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்றும் எண்ணினர்.

தங்களது தவறை மறைக்க ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் மீது பொய் புகார் பெற்று, அதன்பேரில் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் அவர்களை கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.

அவர்கள் இறந்த பின்பு அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஆவணங்களை அவசர அவசரமாக திருத்தினர் என்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சாட்சியம் அளித்துள்ளார்.

இதுவரை பெண் போலீஸ் ரேவதியின் வாக்குமூலம் மட்டுமே இந்த வழக்கில் முக்கியமானதாக இருந்த நிலையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இந்த பரபரப்பு தகவலை கோர்ட்டில் தெரிவித்துள்ளார். எனவே இது, 2-வது முக்கிய சாட்சியாக மாறி இருக்கிறது.

21-ந் தேதி

இந்த வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட போலீஸ்காரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சிலரது சார்பில் விசாரிக்க வேண்டும். இதற்காக இந்த வழக்கு வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனே கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்