ஆன்லைன் தேர்வு போராட்டம்: கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ்
ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ‘ஆன்லைன்’ மூலம் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த மாதம் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக மதுரையில் 9 மாணவர்கள் மீதும், கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கு என தமிழகத்தில் மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்குகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் போலீசார் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.