கோவை மாணவி கொலையில் திருப்பம்...! தாயாரின் நண்பரே பலாத்காரம் செய்து கொன்ற கொடுமை...!
2 பவுன் நகைக்காக பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்று விட்டு நாடகமாடிய கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை,
கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் கோவை கிழக்கு பகுதி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சரவணம்பட்டி யமுனா நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் கிடந்த சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து சாக்குமூட்டையை திறந்து பார்த்தபோது, அது காணாமல் போன மாணவி என்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக மீட்கப்பட்ட மாணவியின் கை, கால்கள் கயிறுகளாலும், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவியை யாராவது கொலை செய்து விட்டு, உடலை இங்கு வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.
மேலும் மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில், அவர் யாருக்கெல்லாம் போன் செய்துள்ளார். அவருடன் கடைசியாக பேசியவர்கள் யார் என்ற தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவி, மாயமான நாளன்று கடைசியாக அதே பகுதியை சேர்ந்த கட்டித் தொழிலாளியான முத்து குமார்(44) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர்.
முதலில் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்த முத்துக்குமார், கடைசியில் தான் மாணவியை கற்பழித்து கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி முட்புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இறந்த மாணவியின் தாயார் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளியான முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமாருக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது.
முத்துக்குமார் தனது குடும்ப செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி மாணவியின் தாயாரிடம் 2 பவுன் நகையை வாங்கி சென்றிருந்தார். ஆனால் அந்த நகையை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. மாணவியின் தாய் அவரிடம் கேட்டபோது, சில நாட்களில் திருப்பி தந்து விடுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் மாணவியின் தாய் ஊருக்கு சென்றதை அறிந்த முத்துக்குமார், அவரது வீட்டிற்கு சென்றார்.
அப்போது அங்கு அவரது மகளான மாணவி மட்டுமே இருந்தார். அவரிடம், எனக்கு ஒரு உதவி செய், நகையை நான் திருப்பி தந்து விட்டதாக உனது தாயாருக்கு போன் செய்து சொல்லி விடு, நான் நாளைக்கே அந்த நகையை உன்னிடம் வந்து கொடுத்து விடுகிறேன் என்றார்.
மாணவியும் அதனை நம்பி தனது தாயாரிடம் முத்துக்குமார் நகையை திருப்பி கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று முத்துக்குமார் மாணவிக்கு போன் செய்து நகையை வாங்கி விட்டதாகவும், தன்னுடைய வீட்டிற்கு வந்து வாங்கி கொள் என்று தெரிவித்தார்.
உடனே மாணவி நகையை வாங்குவதற்காக முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்றதும் நகையை தருமாறு கேட்டார். அதற்கு சிறிது நேரம் காத்திரு என்று கூறிய அவர், மாணவியின் கையை பிடித்து இழுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.
அதிர்ச்சியான மாணவி கூச்சலிட்டு சத்தம் போட்டார். இதனால் பயந்து போன அவர், மாணவியின் வாயில் துணியை திணித்து, தாக்கி கீழே தள்ளினார். பின்னர் மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார்.
இதில் மாணவி மயங்கினார். நீண்ட நேரமாகியும் மாணவி எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த முத்துக்குமார் மாணவியின் கையை பிடித்து பார்த்தார். அவர் இறந்து விட்டது தெரியவரவே அதிர்ச்சியானார். பின்னர் சாக்குமூட்டையில் மாணவியின் உடலை கட்டி குப்பை கிடங்கில் வீசிச் சென்றது தெரியவந்தது.
இதற்கிடையே மாணவி மாயமானது குறித்து அவரது தாய், முத்துக்குமாரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் தான் பார்க்கவில்லை என்றும், நான் உன்னிடம் வாங்கிய நகையை அவளிடம் கொடுத்தேன். அதனை வாங்கி கொண்டு ஓடியிருப்பாள் என்றும் மாணவி பற்றி தவறாக கூறி உள்ளார்.
மேலும் போலீஸ் நிலையத்திற்கு தாயுடன் சென்று புகாரும் கொடுத்து தேடியிருக்கிறார். மாணவியின் உடலை கைப்பற்றிய போது தாயுடன் இருந்த அவர், அவரது உடலை பார்த்து கதறி அழுதும் நாடகமாடி உள்ளார்.
இந்த தகவல்களை முத்துக்குமாரே போலீசாரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.