வேலை வாங்கி தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் மறுப்பு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேரின் முன் ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேரின் முன் ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த இரு வழக்குளில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தது தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில் ரவீந்திரன் அளித்த புகாரில் பணம் பெற இடைத்தரகராக இருந்ததாக கூறப்படும் விஜய் நல்லத்தம்பியும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி தரப்பில், தன் பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி என்றும், அவரை காவல்துறை பாதுகாக்கிறது என்றும், தனக்கு தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில், வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
மேலும் விஜய் நல்லதம்பியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதால் அனைவரின் முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
புகார்தாரர் ரவீந்திரன் தரப்பிலும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம். நிர்மல்குமார், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செல்ல உள்ளதால், தள்ளுபடி உத்தரவை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகார்களில் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை என கூறி ராஜேந்திர பாலாஜி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.