தி.மு.க அரசு அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை - ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் தி.மு.க அரசு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.;
தேனி,
கடந்த 15 ஆம் தேதி அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய எடப்பாடி கே பழனிசாமி ," தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் அதற்கு எதிராக தமிழகம் முழுவதும் 17 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது தேனியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது :-
அனைத்து மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளிடமும் தொலைபேசியில் பேசினேன் . தங்கள் மாவட்டங்களில் பொதுமக்கள் திரண்டுவந்து தி.மு.க. ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். அதே போல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு மாதம் ரூ .1000 வழங்கப்படுவதாக ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். ஆனால் தற்போது வரை அது வழங்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி முதியோர் உதவித்தொகையை ரூ .1500 ஆக உயர்த்துவோம் என தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது . மாணவர்களின் கல்விக்கடனை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வதாக தி.மு.க. தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது.அதுவும் நிறைவேற்றபடவில்லை.
போக்குவரத்து தொழிலாளர்களின் முந்தய ஓய்வூதியம் திரும்ப வழங்கப்படும் என அளித்த கோரிக்கையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை . இவ்வாறு ஆட்சிக்கு வந்த 7 மாதங்களில் தி.மு.க அரசு அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை .
இவ்வாறு அவர் பேசினார்.