கோத்தகிரியில் பிளஸ்- 2 மாணவி பலாத்காரம்; கோவை தம்பதி போக்சோவில் கைது

கோத்தகிரியில் பிளஸ்-2 மாணவிபலாத்காரம் செய்ததாக கோவை தம்பதி போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-17 05:53 GMT
கோத்தகிரி,

கோவை மாவட்டம், சூலூர், பட்டணம் சாலையைச் சேர்ந்தவர் அஷித் (வயது 22). உடற்பயிற்சி கூட (ஜிம்) பயிற்சியாளர். இவருடைய மனைவி கிருபா (21). அஷித்தின் வீட்டிற்கு சென்று, அவரின் மனைவி கிருபாவிடம், கோவையை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் டியூசன் படித்து வந்துள்ளார். அப்போது அந்த மாணவிக்கும், கிருபாவின் கணவர் அஷித்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாணவியின் பெற்றோர், கடந்த வாரம் கோத்தகிரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாணவியை அழைத்து வந்து அவர்களது பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளனர்.

இதை அஷித் கோத்தகிரிக்கு சென்று மாணவியை கடத்திச்சென்று கோவை, சூலூரில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இதற்கு அவரது மனைவி கிருபாவும் உடந்தையாக இருந்துள்ளார். மாணவியை காணாததால் பெற்றோர் இதுபற்றி கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில், மாணவி, அஷித்துடன் சூலூரில் வாடகை வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அஷித், கிருபா மற்றும் காணாமல் போன மாணவியை கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இது குறித்துஊட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி விசாரணை நடத்தியதில், அஷித் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்தகாரம் செய்ததும், இதற்கு அவரது மனைவி கிருபா உடந்தையாக இருந்ததும் உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்