வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.5,400 கோடி வர்த்தகம் பாதிப்பு
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.5 ஆயிரத்து 400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
சென்னை,
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர். தமிழகத்தில் பெரும்பாலான வங்கி கிளைகள் மூடப்பட்டன. 5½ லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்த நிலையில் ரூ.5 ஆயிரத்து 400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 (நேற்று) மற்றும் 17-ந்தேதிகளில் (இன்று) வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
அதன்படி, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சுமார் 80 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கிளை மேலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.
இதன்காரணமாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 ஆயிரத்து 500 பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலான வங்கிகள் செயல்படவில்லை. வேலைநிறுத்த போராட்டத்தை பொறுத்தமட்டில் கிளை மேலாளர்கள் பதவிக்கு மேல் உயர் பதவி வகிப்பவர்கள் போராட்டத்தில் பங்கேற்க முடியாது.
இதனால் கிளை மேலாளர் பொறுப்பில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. கிளை மேலாளர் பதவிக்கு மேல் உயர் பதவிகளை கொண்ட வங்கி கிளைகளை பொறுத்தமட்டில் வழக்கம் போல் காலை 10 மணிக்கு வங்கி கிளை திறக்கப்பட்டன.
இருந்தபோதிலும் பணியாளர்கள் வேலைக்கு வராததால் அங்கு வங்கி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. சில இடங்களில் போராட்டத்தில் பங்கு பெறாத அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் சிலர் மட்டும் வேலைக்கு வந்தனர். இதுபோன்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வங்கி பணியாளர்கள் வழங்க முடியாமல் திணறினர்.
பல இடங்களில் வங்கிகள் திறந்து வைக்கப்பட்டிருந்தபோதிலும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால் வெறிச்சோடி கிடந்தது. பெரும்பாலான வங்கிகளில் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம். இரு நாட்களும் வங்கி செயல்படாது' என எழுதப்பட்டிருந்த அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டு இருந்தது.
வேலைநிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் செலுத்த முடியாமலும், முதிர்வடைந்த நிரந்தர டெபாசிட் பணத்தை எடுக்க முடியாமலும், காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் தவித்தனர்.
வங்கி வேலை நிறுத்தம் குறித்து தெரியாத வாடிக்கையாளர்கள் சிலர் வங்கி சேவைக்காக நேற்று தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு சென்றனர். அங்கு சென்ற பின்புதான் வேலை நிறுத்தம் குறித்து தெரிந்ததால் வங்கி தொடர்பான பணிகளை முடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சி.எச்.வெங்கடாச்சலம், கிருபாகரன், பாலாஜி, அருணாச்சலம், சி.பி.கிருஷ்ணன், ராமபத்திரன், முரளிசவுந்திரராஜன், ஜெர்ரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வங்கி ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்ட முடிவில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்களின் சேமிப்பு பணம் 157 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. பொதுமக்களின் பணம் என்பது அரசின் மேற்பார்வையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்த்து விட்டால் பொதுமக்களின் சேமிப்புக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது.
அதேபோன்று பொதுத்துறை வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் பொதுமக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. தனியாரிடம் ஒப்படைக்கும் போது இதை எதிர்பார்க்க முடியாது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
தமிழகத்தை பொறுத்தமட்டில் 80 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தென்இந்தியாவில் உள்ள வங்கிகளில் செலுத்தப்படும் காசோலைகளை பரிமாற்றம் செய்யும் பணிகள் நடைபெறும் நகரங்களில் சென்னையும் ஒன்றாகும். வேலைநிறுத்தம் காரணமாக 5½ லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதன்மூலம் ரூ.5 ஆயிரத்து 400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். இல்லாதபட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று அவர் கூறி உள்ளார்.
2 நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏ.டி.எம். சேவையும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தத்துக்கு தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆதரவு காணப்பட்டது. அந்தவகையில் சுமார் 7 லட்சம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், 1 லட்சத்துக்கு அதிகமான வங்கி கிளைகள் மற்றும் மண்டல கிராம வங்கிகளில் சேவை பாதிக்கப்பட்டதாக அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு செயலாளர் சவுமியா தத்தா தெரிவித்தார்.
இதைப்போல மும்பை, டெல்லி, சென்னை ஆகிய 3 மண்டலங்களில் சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான 39 லட்சம் காசோலைகள் முடங்கியதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும், தனியார் வங்கிகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கியது குறிப்பிடத்தக்கது.