தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவகாற்றால் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாகப்பட்டினத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று முதல் வரும் 20ந்தேதி வரை, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவித்து உள்ளது. இதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாககூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.