ஒரு மூட்டை பொட்டாஷ் உரம் ரூ.1,040-க்கு கிடைக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

தட்டுப்பாட்டை போக்கி பொட்டாஷ் உரம் ஒரு மூட்டை ரூ.1,040-க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-12-15 22:11 GMT
சென்னை,

பொட்டாஷ் உரத்துக்கு தற்போது டெல்டா மாவட்டங்களில் பற்றாக்குறை நிலவுவதாகவும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல் வருகின்றன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களை பாதுகாப்பதற்கு பொட்டாஷ் உரம் தேவைப்படுகின்ற நிலையில், வெளிச்சந்தையில் உரத்தின் விலை விஷம் போல் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

ஒரு மூட்டை பொட்டாஷ் உரத்துக்கு கூடுதலாக ரூ.700 கொடுக்கக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளதாகவும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பொட்டாஷ் உரம் இருப்பில் இல்லை என்றும், முந்தைய விலையான அதாவது ஒரு மூட்டை ரூ.1,041-க்கு பொட்டாஷ் உரம் கிடைக்க வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இருப்பு இல்லை

இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏற்கனவே இருப்பில் உள்ள 18 ஆயிரத்து 600 டன் பொட்டாஷ் ரூ.1,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், புதிதாக வந்துள்ள பொட்டாஷ் உரம் ஒரு மூட்டை ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் உண்மை நிலை வேறாக இருக்கிறது. இருப்பில் உள்ள பொட்டாஷ் உரத்தை ரூ.700 கூடுதலாக விலை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு இல்லை என்ற நிலைமை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

ரூ.1,040-க்கு கிடைக்க நடவடிக்கை

மேலும் உரிய காலத்தில் உரங்களை பயன்படுத்தினால்தான் அது உரிய பயனை விவசாயிகளுக்கு அளிக்கும் என்ற சூழ்நிலையில், நேற்றுதான் (நேற்று முன்தினம்) தூத்துக்குடி துறைமுகத்துக்கு உரங்கள் வந்துள்ளன என்று கூறுவது காலம் தாழ்ந்த நடவடிக்கை. இந்த உரம் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று சேர மேலும் தாமதமாகும். மேலும் விவசாயிகள் புகார் தெரிவிக்க மாநில அரசு உதவி மையம் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இருப்பது கண் துடைப்பு ஆகும்.

இதில் இருந்து வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களையும், இடுபொருட்களையும் உரிய காலத்தில் நியாயமான விலையில் வழங்க அரசு தவறிவிட்டது என்பது தெளிவாகிறது. அரசின் மெத்தனப்போக்குக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலைமையையும், உரத்தின் இருப்பை முன்கூட்டியே அரசு உறுதி செய்யாததையும் கருத்தில்கொண்டு, பொட்டாஷ் உரம் பழைய விலைக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொட்டாஷ் உர தட்டுப்பாட்டை நீக்கி, விவசாயிகளுக்கு முந்தைய நிலையில், அதாவது ஒரு மூட்டை ரூ.1,040 என்ற விலையில் பொட்டாஷ் உரம் தாராளமாக விரைந்து கிடைக்க ஆவன செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்