காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: தங்க நகைகளை கழற்றி கொடுத்து விட்டு காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி...!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்கநகைகளை கழற்றி கொடுத்து விட்டு காதலனை கல்லூரி மாணவி கரம் பிடித்தார்.

Update: 2021-12-15 01:46 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மார்த்தாண்டம் அருகே உள்ள கரவிளாகத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் சஜின் (வயது 25). அந்தப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். அந்த கடைக்கு கருங்கல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் அபிஷா (21) கல்லூரிக்கு தேவையான பொருட்கள் வாங்க வந்தார். அப்போது அவருக்கும், சஜினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அபிஷா கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சஜினுக்கும் அபிஷாவுக்கும் இடையே இருந்த பழக்கம் நாட்கள் செல்லச்செல்ல காதலாக மாறியது. கடந்த 1½ ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அபிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் வாங்கி கொண்டனர். இதனால் காதலனுடன் பேசமுடியாமல் அபிஷா தவியாய் தவித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அபிஷாவின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அப்போது அவசரமாக பக்கத்து வீட்டுக்கு சென்ற அபிஷா அங்கிருந்தவரின் செல்போனை வாங்கி சஜினுக்கு தனது நிலைமையை எடுத்து கூறினார். மேலும் உடனடியாக அழைத்து செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து சஜின் மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்து அபிஷாவை அழைத்து சென்று, கரவிளாகம் பகுதியில் உள்ள கோவிலில் நண்பர்கள் உதவியுடன் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு மாலையும், கழுத்துமாக வந்து தஞ்சமடைந்தனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் அவர்களது பெற்றோரை வரவழைத்து பேசினார். அப்போது அபிஷாவின் பெற்றோர் படிப்பு முடிந்த பிறகு திருமணம் பற்றி பார்க்கலாம் என்று அபிஷாவிடம் கெஞ்சினார்கள். ஆனால் அதை அவர் காதில் வாங்கவில்லை. தனது காதல் கணவருடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் அபிஷா அணிந்திருக்கும் நகைகளை கழற்றித்தரும்படி பெற்றோர் கேட்டனர். அதைத்தொடர்ந்து தான் அணிந்திருந்த நகைகளை போலீசார் முன்னிலையில் அபிஷா பெற்றோரிடம் கழற்றி கொடுத்தார். அவர்கள் இருவரும் திருமண வயதை எட்டி இருந்ததால், அபிஷாவை காதல் கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்