தமிழகத்தில் 22% பெண்களுக்கு மனஅழுத்த நோய்: அமைச்சர் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் பிரசவத்துக்கு பின் 22% பெண்கள் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், முதியோர் மற்றும் மன நலம் குன்றியோருக்கான பிரத்யேக ஐந்து சிகிச்சை பிரிவுகளை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதன்பின்பு, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், இந்த மருத்துவமனையில், மனநலம் குன்றிய நோயாளிகளுக்கான மீட்பு சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இதேபோல், 22 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் துவங்கப்படும்.
இதற்காக, தலா 10 படுக்கைகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை மற்றும் உணவு, உடை இலவசமாக வழங்கப்படும். பிரசவித்த பெண்களில் 22 சதவீதம் பேருக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டு, மன அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, உடல் பலவீனம், பசியின்மை, துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி, தங்களையும், குடும்பத்தினரையும் எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.