வடபழனி முருகன் கோவிலில் ஜனவரி 23-ந் தேதி கும்பாபிஷேகம்

வடபழனி முருகன் கோவிலில் ஜனவரி 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கோவிலில் யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது.;

Update: 2021-12-13 19:07 GMT
சென்னை,

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில். இக்கோவிலுக்கு சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 1890-ம் ஆண்டு ஓலை கொட்டகையுடன் கோவில் நிர்மாணிக்கப்பட்டது. தொடர்ந்து 1920-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலுக்கு 1972-ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டப்பட்டது. தொடர்ந்து, வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகமவிதிப்படி 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில், கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலய பிரதிஷ்டை கடந்த ஆண்டு மார்ச் 12-ந் தேதி நடத்தப்பட்டது.

ஜனவரியில் கும்பாபிஷேகம்

இதைத் தொடர்ந்து, ரூ.2.56 கோடி செலவில் 34 திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ள திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கோவிலில் முழு வேலைப்பாடுகள் முடிந்து வருகிற ஜனவரி மாதம் 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்தார். அதன்படி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி யாகசாலை முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) ரேணுகா தேவி, தனபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்