குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ உண்மை தானா?

குன்னூரில் விபத்தில் சி்க்கிய ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ உண்மை தானா? என்று தடயவியல் சோதனைக்கு அனுப்பிய போலீசார் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

Update: 2021-12-12 23:03 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங் கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விமானப்படை ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் விபத்து நடந்த இடம் மற்றும் விபத்து நடப்பதற்கு முன்பு வீடியோ எடுத்த ரெயில் பாதை பகுதி, ஹெலிகாப்டர் வான் வழியாக பறந்ததன் கீழே உள்ள நில மார்க்கம் உள்ளிட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள்

மேலும் விபத்து நடந்தபோது மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள், பொது மக்கள் போன்றவர்களை வருவாய்த்துறையினர் விசாரித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் படுகாயத்துடன் ராணுவ அதிகாரிகளை மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், தீயணைபபு வீரர்கள் என்று 20-க்கும் மேற்பட்டவர்களிடம் விமானப்படை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் சம்பவ இடத்தில் தீயில் கருகி கிடந்தவர்கள் எந்த நிலையில் இருந்தனர்? அவர்கள் உயிருக்கு போராடினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், விபத்துக்கான காரணங்கள் மற்றும் நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதுபோன்று போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வீடியோ உண்மை தானா?

முப்படை தலைமை தளபதி உள்பட 13 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டரை வீடியோ எடுத்த நபரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதில் பதிவாகி இருக்கும் வீடியோ எப் போது எடுக்கப்பட்டது, அதில் இருக்கும் தகவல் என்ன? அவை உண்மை தானா? என்பதை கண்டறிய அந்த செல்போன் கோவையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் உயர் பரிமாற்ற கம்பிகள் மற்றும் உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் இருக்கிறதா?, அப்படி இருந்தால் அவை சேதம் அடைந்து உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும் என்று மின்சாரத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

பாகங்களை மீட்கும் பணி

இந்த கடிதத்துக்கான விளக்கம் கிடைத்ததும், மேலும் ஆதாரங்களை கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்படும். மேலும் தீப்பிடித்து எரிந்த ஹெலிகாப்டரில் மீதம் உள்ள பாகங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாகங்கள் கிடக்கும் பகுதியில் மரத்துண்டுகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து ஹெலிகாப்டரின் இறக்கை, வால்பகுதியை மீட்கும் பணியில் விமானப்படை, ராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். விபத்து நடந்த பகுதி மலைப்பகுதி என்பதால் அந்த பாகங்களை அப்படியே எடுக்க முடியவில்லை. எனவே ஹெலிகாப்டரில் மீதம் உள்ள பாகங்களை வெட்டியோ அல்லது உடைத்தோ பிரிக்கப்பட்டு வருகிறது.

தேடுதல் வேட்டை

மேலும் சம்பவம் நடந்த பகுதி அருகே உள்ள வனப்பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா? என்பது குறித்து சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்