‘கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்’ - விரைவில் திறக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்பாடு

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

Update: 2021-12-12 11:50 GMT
சென்னை,

ஆசியாவின் மிகப்பெரிய க்ளோவர் வடிவ மேம்பாலம் கத்திப்பாரா, கடந்த 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கும் பணி சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி ஒப்புதல் பெறப்பட்டது. 

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் 5.38 லட்சம் சதுர பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய சாலைகளில் இருந்தும் அணுகக் கூடிய வகையிலும், ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சதுக்கத்தில் 200 முதல் 400 சதுர அடியில் 56 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 128 கார்கள், 340 இரு சக்கர வாகனங்கள், 8 பேருந்து நிழற்குடைகள் உள்ளிட்ட வாகன நிறுத்தும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் மொத்தம் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மற்றும் மாநகர மக்கள் கூடும் பொது இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகர்ப்புற சதுக்கத்தை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து வருகிறது. 

மேலும் செய்திகள்