தேசத்தை காக்கக்கூடிய ஒரு தளபதி, தண்ணீர் கேட்டும் தர முடியலையே...மீட்பு பணியில் ஈடுபட்டவர் வேதனை

மீட்பு பணியில் ஈடுபட்ட கிராம மக்கள் இந்தியாவின் முப்படை தளபதியை மீட்டும், அவர் இறந்தது கிராம மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-11 08:01 GMT
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும் அப்பகுதி மக்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து நிகழ்ந்தது பற்றியும், அதனை நேரில் பார்த்தது குறித்தும் அப்பகுதி மக்களும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் உருக்கமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், ராணுவ அதிகாரிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட சிவகுமார் என்பவர், தான் முப்படைத்தளபதியான பிபின் ராவத்தை உயிருடன் மீட்டு தூக்கி வந்தபோது அவர் குடிக்க தண்ணீர் கேட்டார். ஆனால் அவர் இறந்தது அறிந்ததும் தனக்கு மனவேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

நான் ஒரு பில்டிங் காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறேன். எனது உறவினர் ஒருவரின் வீடு குன்னூரில் உள்ளது. விபத்து நடந்த அன்று எனது உறவினரை பார்ப்பதற்காக நான் குன்னூருக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது உறவினருக்கு போன் செய்து நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் நீ வரக்கூடிய வழியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது என்றார்.

அவர் சொன்ன இடம் நான் சென்று கொண்ட இடத்தில் இருந்து பக்கத்தில் தான் இருந்தது. உடனடியாக நான் சம்பவ இடத்திற்கு சென்றேன். அப்போது அங்கு 20 அடி உயரத்திற்கு தீ எரிந்து கொண்டிருந்தது. தீ அதிகமாக எரிந்து கொண்டிருந்ததால் என்னால் அதன் அருகே செல்ல முடியவில்லை. என்ன செய்வது என்று அங்குமிங்கும் பார்த்தபோது ஹெலிகாப்டர் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் 3 பேர் கிடந்ததை பார்த்தேன்.

உடனடியாக நான் அங்கு ஓடி சென்று பார்த்தபோது, 3 பேருக்கும் உயிர் இருந்தது. உடனே அவர்களை மீட்பதற்காக அருகே நின்ற எனது நண்பர்களை அழைக்க வெளியில் வந்தபோது, போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்தார். அவரிடம் சார் 3 பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்றேன். உடனடியாக இன்ஸ்பெக்டர், நான் மற்றும் சிலர் அங்கு சென்றோம். பின்னர் பெட்ஷீட்டால் சுற்றி 3 பேரையும் மேலே தூக்கி வந்தோம்.

அப்போது அதில் ஒருவர் வலியால் துடித்து கொண்டிருந்தார். நான் அவரை பார்த்து, சார் கூலாக இருங்க. நாங்க எல்லாம் இருக்கோம், உங்களை காப்பாத்திடுவோம் என்று சொன்னேன். அப்ப அவர் என்னை திரும்பி பார்த்து, வாட்டர்... வாட்டர் ப்ளீஸ்ன்னு சொன்னார். அப்போது அதிகாரிகள் இந்த சமயத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று சொல்லியதால் தண்ணீர் கொடுக்க முடியவில்லை. பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் நான் மீட்டது முப்படை தளபதி பிபின் ராவத் என்பது எனக்கு தெரியாது.

3 மணி நேரம் கழித்து ஒரு ஆபிசர் என்னருகே வந்தார். அப்போது அவர் என்னை தோளில் தட்டி, ஒரு போட்டோவை காட்டினார். அது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் போட்டோ. அந்த ஆபிசர், நீங்கள் காப்பாற்றியது நம் நாட்டின் சீப் கமாண்டர் என்றார். முப்படைத் தளபதியை நாம் மீட்டுள்ளோம் என்பதில் எனக்கு பெருமையாக இருந்தது. ஆனால் வீட்டிற்கு சென்று செய்தியை பார்த்த பின்பு தான் அவர் இறந்து விட்ட தகவல் தெரிந்தது. அதனை கேட்டதுமே எனது மனதுக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது.

நம்ம தேசத்தை காக்கக்கூடிய ஒரு தளபதி, நம்ம கிட்ட தண்ணீர் கேட்டும் நம்மலால தர முடியலைங்கிறது ஒருபுறம் கஷ்டமா இருந்த நிலையில் அவர் இறந்ததும் மேலும் வருத்தமாகி விட்டது. அன்று முழுவதும் தூக்கமே வராமல் மிகவும் சங்கடப்பட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மீட்பு பணியில் ஈடுபட்ட கிராம மக்கள், இந்தியாவின் முப்படை தளபதியை மீட்டும், அவர் இறந்தது கிராம மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்