பாரதியார் படைப்பு ஆய்வாளர்களுக்கு விருது: 1,330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசுகள்

திருக்குறளின் 1,330 திருக்குறளையும் முற்றோதல் செய்த மாணவர்களுக்கு பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2021-12-10 23:13 GMT
சென்னை,

மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று, “’மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்களின் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன், ய.மணிகண்டன் ஆகியோருக்கும் தலா 3 லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டு சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்’’ என்று அறிவித்தார்.

விருது வழங்கினார்

அதன்படி 10-ந் தேதியன்று (நேற்று) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சீனி விசுவநாதன் மற்றும் ய.மணிகண்டன் ஆகியோருக்கு ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், மறைந்த பெரியசாமித்தூரன் ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்களது குடும்பத்தாருக்கு ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் விருதுத்தொகை தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, நவி மும்பை தமிழ்ச் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் முதல்-அமைச்சர் வழங்கினார்.

திருக்குறள் ஒப்புவித்தல்

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், “திருக்குறள் முற்றோதல் (வாய்மொழியாக ஒப்புவித்தல்) செய்து குறள் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு பரிசுத்தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு, முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்ச வரம்பு நீக்கப்பட்டு பரிசுத்தொகை உயர்த்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த மாணவர்கள் 219 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் குறள் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக பரிசு பெறுவோர் அனைவரையும் சென்னைக்கு வரவழைப்பதை தவிர்க்கும் பொருட்டு, இந்த 219 பேரில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் குறள் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் (பொறுப்பு) செ. சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்