இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்ப குழு ஆய்வு

லாஸ்பேட்டை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினார்கள்

Update: 2021-12-10 18:34 GMT
லாஸ்பேட்டை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினார்கள்.
விமான நிலையம் விரிவாக்கம்
புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய புதுவை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசிடம் இருந்து 104 ஏக்கர் நிலத்தை பெற்று புதுச்சேரி விமான நிலைய ஓடுதளத்தை 3 ஆயிரத்து 330 மீட்டராக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.
இந்தநிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் நந்தகுமார், பிரபா, வாசிம், பால்லேந்திரகுமார் ஆகியோர் புதுவை விமான நிலையத்தில் நேற்று ஆய்வு நடத்தினர்.
விமான சேவை
பின்னர் அவர்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது புதுச்சேரி சுற்றுலாத்துறை செயலர் விக்ராந்த் ராஜா, துறை இயக்குனர் பிரியதர்ஷினி,   கல்யாணசுந்தரம்     எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, புதுவை தாசில்தார் ராஜேஷ் கண்ணா, வானூர் தாசில்தார் உமா மகேஸ்வரன், விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது விமான நிலைய விரிவாக்கம் செய்ய முன்மொழியப்பட்ட நில இருப்புகள், விமான ஓடுதள பாதையை அகலப்படுத்தும் பணி, உள்ளூர் விமான சேவையை தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்