மணலிப்பட்டில் டிரோன் மூலம் சர்வே எடுக்கும் பணி

கிராமப்புற மக்களுக்கு சொத்து அட்டை வழங்க மணலிப்பட்டில் டிரோன் மூலம் சர்வே எடுக்கும் பணியை கலெக்டர் பூர்வா கார்க் தொடங்கிவைத்தார்

Update: 2021-12-10 18:13 GMT
கிராமப்புற மக்களுக்கு சொத்து அட்டை வழங்க மணலிப்பட்டில் டிரோன் மூலம் சர்வே எடுக்கும் பணியை கலெக்டர் பூர்வா கார்க் தொடங்கிவைத்தார்.
சொத்து அட்டை
கிராமப்புறங்களில் வீடுகள் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு ‘உரிமைகளின் பதிவை’ வழங்குவதையும், சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி ஸ்வமித்வா திட்டம் தொடங்கப்பட்டது. 
இந்த திட்டத்தின் படி டிரோன் கேமராக்களை பயன்படுத்தி அனைத்து கிராமப்புற சொத்துக்களையும் ஆய்வு செய்து ஒவ்வொரு கிராமத்திற்கும் GIS அடிப்படையிலான வரைபடங்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிரோன் மூலம் சர்வே 
இந்த திட்டம் தென் இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை அடுத்த மணலிப்பட்டு கிராமத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், துணை கலெக்டர் ரிஷிதா குப்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதையடுத்து புதுச்சேரி நில அளவை பதிவேடுகள் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் குடியிருப்புகளை டிஜிட்டல் முறையில் சர்வே எடுத்து வருகின்றனர்.
இதில் நில அளவை பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ், வில்லியனூர் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் நில அளவை பதிவேடுகள் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்