தாலி கட்டும் நேரத்தில் மப்பில் மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!
தர்மபுரி பாலக்கோடு அருகே மணமகன் குடித்து விட்டு போதையில் இருந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன்(வயது 32) என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நேரு நகரை சேர்ந்த லட்சுமி (வயது 22) என்ற பெண்ணிற்கும், திருமணம் நிச்சயக்கபட்டிருந்தது.
திருமணத்திற்கு பத்திரிக்கை அடித்து திருமண ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வஜ்ஜிரபள்ளம் என்ற கிராமத்திலுள்ள ஈஸ்வரன் கோவிலில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணமும் நடைபெறவிருந்தது. இந்நிலையில் திருமண நாளன்று மணப்பெண்ணின் உறவினர்கள் கோவிலில் சென்று பார்த்த போது, சம்மந்தபட்ட மாப்பிள்ளை மற்றும் உறவினர்களையும் காணாதது கண்டு அதிர்ச்சயடைந்துள்ளனர்,
இதனையடுத்து மணமகன் சரவணன், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மது குடித்த மயக்கத்தில் சரவணன் கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மணமகள் லட்சுமி இந்த குடிகார மணமகனும், வேண்டாம், திருமணமும் வேண்டாம் என மாலையை கழற்றி வீசிவிட்டார். திருமணத்திற்குண்டான செலவுகளை செட்டில் செய்ய கோரி பெண்ணின் தாய்மாமன் பாலு மாரண்டஅள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போதை தெளிந்த மணமகன் சரவணன், இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணை திருமணம் செய்துகொள்ளுகிறேன் என காவல் நிலையத்திலேயே மணமகளிடம் எவ்வளவு கெஞ்சி பார்த்தும், இந்த மாப்பிள்ளையும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டார், மணமகள் லட்சுமி.
தலைக்கேறிய போதையால், திருமணம் நின்று போனதை அறிந்து தடுமாறி நிற்கிறார் மணமகன் சரவணன்.