கஞ்சா கடத்தல் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
புதுச்சேரியில் முதல் முறையாக கஞ்சா கடத்தல் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கஞ்சா கும்பலை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் கஞ்சா விற்பனை செய்வததாக கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கம் (வயது 24) என்பவரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அவரை கஞ்சா கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஒதியஞ்சாலை போலீசார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரனுக்கு பரிந்துரை செய்தனர். இதனை தொடர்ந்து தங்கத்தை கஞ்சா கடத்தல் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை ஒதியஞ்சாலை போலீசார், காலாப்பட்டு சிறை அதிகாரிகள் மூலம் தங்கத்திடம் வழங்கினர். இதன் மூலம் அவர் ஓராண்டுக்கு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர முடியாது. புதுச்சேரியில் கஞ்சா கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.