தனியார் மயத்துக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் போராட்டம்

தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-12-08 18:49 GMT
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் மயம்
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக புதுவை அமைச்சரவையிலும் விவாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தனியார் மயமாக்கினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து ஊழியர்களுக்கு விளக்கிட கருத்துகேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்துகேட்பு கூட்டம் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பணிகளை புறக்கணித்து...
ஆனால் தனியார் மயத்துக்கு ஊழியர்கள் தொடர் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். நேற்று அவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்துறை தலைமை அலுவலக வளாகத்தில் கூடிய ஊழியர்கள், தனியார் மயத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர்   வேல் முருகன், சிறப்பு ஆலோசகர் ராமசாமி,    பொறியாளர் சங்கம் தணிகாசலம்,   தணிகை வேலன்,   அச்சுதானந்தம், உள்பட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின்கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. 
கருத்துகேட்பு
போராட்டம் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர்   வேல் முருகன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மின்துறையை கார்ப்பரேசனாகவோ அல்லது தனியார் மயமாகவோ மாற்றக்கூடாது என்று கடந்த ஆண்டு மே மாதம் முதல் போராட்டங்கள்   நடத்தி வருகிறோம். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத்தை கூட்டி அனைத்து எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளையும் கேட்டறிந்து புதுவை மக்களையும், மின்துறை ஊழியர்களையும் பாதிக்காத வகையில் மின்துறையை தனியார் மயம் ஆக்கமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனால் தற்போதைய புதுவை அரசானது மத்திய அரசின் தனியார் மய கொள்கைக்கு         ஆதரவாகவும் எம்.எல்.ஏ.க்களின்    கருத்து களையோ, பொதுமக்களின் கருத்துகளையோ கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கையினை எடுக்க இருப்பதாக அறிகிறோம். மேலும் மின்துறை ஊழியர்களிடம் ஒரு சம்பிரதாயத்துக்காக இன்றும், நாளையும் கருத்துகேட்பு நடத்த உள்ளதாக அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆதரவு தரவேண்டும்
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பணிகளை புறக்கணித்து அனைத்து பொறியாளர்களும், தொழிலாளர்களும் அந்தந்த பிராந்தியத்தில் உள்ள மின்துறை அலுவலகத்தில் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பினை ஜனநாயக முறைப்படி தெரிவித்து வருகிறோம். இப்போராட்டம் என்பது மின்துறை ஊழியர்களின் போராட்டமாக கருதாமல் ஒட்டுமொத்த புதுவை மக்களின் போராட்டமாக கருத்தில் கொண்டு, எங்களின் நியாயமான போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் கூட்டமைப்பு, மத்திய கூட்டமைப்பு, தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், வணிகர் சங்கங்கள், விவசாயிகள் அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
காரைக்கால்
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்காலிலும் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்குள்ள மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன் திரண்டு தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்