திருமணமான பெண் போலீசுக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல்... போலீஸ்காரர் கைது

திருமணமான பெண் போலீசுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-12-08 07:19 GMT
கோவை,

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் போலீஸ்காரராக வேலை செய்பவர் ஏழனைபாண்டி (வயது27). இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்தார். அப்போது ஒரு பெண்போலீசுடன் பழக்கம் ஏற்பட்டது. 

பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். ஏழனைபாண்டி நெல்லை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அந்த பெண் போலீசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பெண்போலீசின் குடும்பம் நிம்மதியாக சென்று கொண்டு இருந்தது.

இந்தநிலையில் ஏழனைபாண்டி, முன்பு கோவையில் இருந்தபோது பெண்போலீசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பெண்போலீசுக்கும், அவருடைய கணவருக்கும் அனுப்பி மிரட்டி வந்துள்ளார். இந்த படங்களை சமூகவலைத்தளத்திலும் பதிவிடப்போவதாக கூறியுள்ளார்.

இதனால் மிகவும் மனஉளைச்சலுக்குள்ளான பெண் போலீஸ், இதுகுறித்து கோவை மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பெண் போலீசுக்கு ஆபாச படம் அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் ஏழனை பாண்டியை சட்டப்பிரிவு 354 (ஏ) -பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு, பெண் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை நகரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண் போலீசுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபட்டு, போலீஸ்காரர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்