நாட்டு வெடிகுண்டு வீசும் வீடியோ
புதுச்சேரியில் பிறந்த நாளுக்காக சிறுவன் நாட்டு வெடிகுண்டு வீசி வெடிக்க செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது
புதுச்சேரியில் பிறந்த நாளுக்காக சிறுவன் நாட்டு வெடிகுண்டு வீசி வெடிக்க செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
வாழ்த்து வீடியோ
புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினான். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது நண்பர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தனர். அந்த வீடியோவில் சிறுவன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை தூக்கி தூரமாக வீசுகிறார். அந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுகிறது. அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அதன்பின் அந்த சிறுவன் அங்கிருந்து நடந்து வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
பரபரப்பு
இதுகுறித்து போலீசார் தரப்பில் கேட்டபோது, அது ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த பழைய வீடியோ எனவும் 17 வயது சிறுவனுக்கு பிறந்தநாள் என்பதால் வித்தியாசமாக வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தற்போது அதை சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர் என்று தெரிவித்தனர். அந்த சிறுவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
அந்த சிறுவனுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். பொதுவாக ரவுடிகள் பிறந்தநாளன்று பொது இடங்களில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. தற்போது புது மாதிரியாக பிறந்தநாளுக்காக சிறுவன் நாட்டு வெடிகுண்டு வீசி வெடிக்க செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.