2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று பெண் தற்கொலை

கரூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-07 18:05 GMT
தரகம்பட்டி,
தையல் தொழிலாளி
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பூசாரிபட்டியை சேர்ந்தவர் சக்தி (வயது 35). இவர், கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (30). இவர்களது மகள்கள் கனிஷ்கா (6), பூவிஷா (3). இவர்களுடன் சக்தியின் தந்தை கருப்பசாமி, தாய் நாச்சம்மாளும் வசித்து வருகின்றனர்.
சரண்யா மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
குழந்தைகளை கிணற்றில் வீசினார்
நேற்று முன்தினம் இரவு சரண்யா தனது குழந்தைகளுடன் ஒரு அறையிலும், கருப்பசாமி, நாச்சம்மாள் மற்றொரு அறையிலும் தூங்கினர். இந்தநிலையில் அதிகாலை 2 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த சரண்யா திடீரென கண் விழித்து, ஒரு மகளை தூக்கிக்கொண்டு வௌியே வந்தார். 
வீடு அருகே உள்ள 100 அடி ஆழ தரைக்கிணற்றில் மகளை வீசி விட்டு, வீட்டுக்கு வந்தார். பின்னர் மற்றொரு மகளையும் தூக்கிச்சென்று கிணற்றில் போட்டு விட்டு, தானும் குதித்தார். 
உடல்கள் மீட்பு
கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டு சக்தி, அவரது பெற்றோர், அருகில் வசிக்கும் உறவினர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தாயும், 2 மகள்களும் கிணற்றில் இறந்து கிடந்தனர். உடனே பாலவிடுதி போலீசாருக்கும், குஜிலியம்பாறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் சிலர் உதவியுடன், கிணற்றில் இறங்கி சரண்யா மற்றும் பூவிஷா ஆகியோரின் உடல்களை மீட்டனர். அதன்பிறகு கிணற்றில் மோட்டார் வைத்து தண்ணீரை இறைத்து 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கனிஷ்காவின் உடல் மீட்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர்,  இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார் (தோகைமலை), பிரபாகரன் (பாலவிடுதி) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்