போலி தடுப்பூசி சான்றிதழ்; உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

போலி சான்றிதழ் வழங்கும் ஊழியர்கள் மீது எந்த வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-12-07 10:49 GMT
சென்னை,

தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவ்வாறு தடுப்பூசி செலுத்துவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இருப்பினும் ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், சமீப காலமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத பலருக்கு தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் வருவதாக அவர் கூறியுள்ளார். ஒரு சில இடங்களில் தடுப்பூசி செலுத்தும் போது தொடர்ந்து தவறாக பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், அந்த குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பிறகு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் போலி சான்றிதழ் வழங்கும் ஊழியர்கள் மீது எந்த வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்