தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும்- தே.மு.தி.க தீர்மானம்

தைப்பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும் என தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.

Update: 2021-12-06 13:22 GMT
சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து சென்னை தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன், கழக துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, எல்.கே.சுதிஷ், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் மொத்தம் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, தைப்பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால், தொடர்ந்து அணை வலுவிழந்து இருப்பதாக கேரள அரசு கூறி வருகிறது. எனவே, அணையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மிக மோசமாக பணப்பட்டுவாடா நடைபெற்றது. எனவே வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் மிக கவனத்துடன் பாதுகாப்பாக தேர்தல் நடத்த வேண்டும். தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க ஏதுவாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்பட  9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்