புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை 12 பேரை பிடித்து விசாரணை
புதுவையில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். 12 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுவையில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். 12 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடிகள் வீடுகளில் சோதனை
புதுவையில் ரடிவுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மேலும் வெடிகுண்டு கலாசாரமும் தலை தூக்கியுள்ளது. இதை தடுக்க ஆபரேஷன் திரிசூல் என்ற பெயரில் போலீசார் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் சுபம் கோஷ், ஜிந்தா கோண்டராமன், இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஜெய்சங்கர், வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் இன்று மாலை பாரதிபுரம், சண்முகாபுரம் பகுதிகளில் உள்ள ரவுடிகளில் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு பதுக்கல்
அந்த பகுதிகளில் உள்ள 44 வீடுகளில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தினர். மேலும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட ரவுடிகள் யாராவது வீடுகளில் பதுங்கி உள்ளனரா? என்றும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 10 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்
இதேபோல் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் வில்லியனூர் கிருஷ்ணன், ராமு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, ராஜன், சரண்யா மறம் அதிரடி படையினர் கணுவாப்பேட்டை, உத்திரவாகினிபேட், பெரியபேட், புதுப்பேட் உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 ரவுடிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.